கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை போலீஸார், தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பி.என்.புதூரைச் சேர்ந்த அமரன் (30), கர்நாடகாவைச் சேர்ந்த ஜொனாதன் சதீஷ் (31), ஆலாந்துறையைச் சேர்ந்த பிரசாந்த் (31), சரவணகுமார் (26), சாயிபாபா காலனியைச் சேர்ந்த நிஷாந்த் (23) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆட்சியரிடம் பரிந்துரைத்தார். அதன் பேரில், மேற்கண்ட ஐந்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (டிச.9) உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அமரன், ஜொனாதன் சதீஷ், பிரசாந்த், சரவணகுமார், நிஷாந்த் ஆகிய 5 பேரும் கோவை மத்திய சிறையில் குண்டர்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, ”மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை போதைப் பொருள் குற்றவாளிகள் 21 பேர் உட்பட 71 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.