திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரியம் சார்பில் ரூ.155 கோடி மதிப்பில் 1,728 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்பணியில், கட்டுமான தொழிலாளர்கள் பிரிவுக்கான அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வெளிப்புறமாக சிமெண்ட் கலவை பூசும் பணியில் இன்று மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர் (54) என்ற தொழிலாளி ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி 9-வது தளத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த மப்பேடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ராஜேஸ்வரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.