குன்னூர்: அருவங்காட்டில் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் கூல் லிப் உள்ளிட்ட ஒன்றரை கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர் கைது செய்யப்பட்டு, இருசக்கர வாகனம் மற்றும் போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அருவங்காடு சுற்றுப் புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அருவங்காடு பகுதியில் பான்பராக் மற்றும் கூல் லிப் உட்பட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதாக அருவங்காடு தனிப் பிரிவு காவலர் காஜா மொய்தீனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் இவருடன், அருவங்காடு போலீஸார் இணைந்து சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, அருவங்காடு அருகே உள்ள பகுதியில் பைக்கில் வந்த பெரிய பிக்கட்டியை சேர்ந்த நாகராஜ் (55) என்பவரை பிடித்து சோதனை செய்ததில், பான்பராக், கூல் லிப் உட்பட போதை வஸ்துக்கள் 7500 பாக்கெட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் பெயரில் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்த அருவங்காரு போலீஸார் போதை வஸ்துக்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.