4 லட்சம் உழவர்கள் தற்கொலை; போராடுபவர்கள் மீது அடக்குமுறை கூடாது: ராமதாஸ் கோரிக்கை


சென்னை: குறைந்தபட்ச கொள்முதல் விலை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். போராடும் உழவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடாமல் அவர்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நெல் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதற்காக தில்லி நோக்கி பேரணியாக சென்ற உழவர்கள் மீது ஹரியானா - பஞ்சாப் எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஹரியானா காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 8 உழவர்கள் காயமடைந்த நிலையில் தில்லி நோக்கிய அவர்களின் பேரணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உழவர் அமைப்புகளைச் சேர்ந்த 101 பேர் பேரணியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அனுமதி அளிக்கப்பட்ட 101 பேர் மட்டும் தான் பேரணியாக சென்றதாக உழவர்கள் கூறும் நிலையில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் பேரணியில் வந்ததாகவும், அனுமதி பெறாத சிலரும் வந்ததாக் கூறி அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துவது நியாயமல்ல. உயிர் ஆதாரக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் உழவர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும்; வேளாண்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்; உழவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; மின்சாரக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது; 2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அதன் மூல வடிவத்தில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தான் உழவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாகும்.

இந்தியாவில் முழுக்க முழுக்க உழவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.27 மட்டும் தான் வருமானம் கிடைப்பதாக உழவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றக் குழு கூறியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை; கொள்முதல் விலை சொல்லிக்கொள்ளும்படியாக அதிகரிக்கவில்லை; அதனால் விவசாயிகள் படிப்படியாக கடன் வலையில் சிக்கி, இப்போது மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொண்டதாக அக்குழு அதன் இடைக்கால அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.

கடன் சுமை அதிகரித்து விட்டதால் தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்தக் குழு, உழவர்களின் பிரச்சினைக்கு தீர்வாக பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிப்பதில் எந்தத் தவறும் இல்லை. உச்சநீதிமன்றக் குழுவின் இந்த பரிந்துரையை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது.

எனவே, குறைந்தபட்ச கொள்முதல் விலை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். போராடும் உழவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடாமல் அவர்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

x