செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட நெரும்பூர் கிராமத்தில் இருந்து இரும்புலிச்சேரி, எடையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையில், பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்திருந்தது. இதன்மூலம், மேற்கண்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் நகரப்பகுதிக்கு சென்று திரும்பினர். இந்நிலையில், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையில் பாலாற்றில் ஏற்றபட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, கிராம மக்களின் போக்குவரத்துக்காக தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலமும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் சேதமடைவதும், இதனால், கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் என கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், இரும்புலிச்சேரி-நெரும்பூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு ரூ.40.33 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்திய மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக தரைப்பாலம் மீண்டும் தண்ணீரில் மூழ்கியது. அதனால், கிராம மக்களின் போக்குவரத்தை கருத்தில்கொண்டு மேம்பால பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, இரும்புலிச்சேரியைச் சேர்ந்த பொன்னையன் கூறியதாவது: பாலாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலை வெள்ளத்தில் சேதமடைவது தொடர்கதையாக உள்ளது. நிலைமை சீரானாலும்கூட சேதமடைந்த தரைப்பாலத்தில் வாகனங்களில் செல்ல அச்சமாக உள்ளது. போக்குவரத்து தடைபடும் நேரங்களில் கிராமத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிலையும் ஏற்படுகிறது.
தற்போது, எடையாத்தூர் வழியாக சுமார் 6 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு நகரப்பகுதிக்கு சென்று வரும் நிலை உள்ளது. அதனால், மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இரும்புலிச்சேரி-நெரும்பூர் இடையே தற்போது, பாலாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், நீரோட்டம் குறைந்ததும் கட்டுமான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றனர்.