விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 'ஆபரேசன் திரை நீக்கு' (Operation storming) மூலம் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சைபர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 பேர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக தமிழகத்தில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி (இன்று) வரை 'ஆபரேசன் திரை நீக்கு' மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி.அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மீனா, எஸ்.ஐ.க்கள் கோபு, ஜெயபிரகாஷ் ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், தஞ்சாவூர் சைபர் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் என்பவர் காரியாபட்டியிலும், மதுரை மாவட்ட சைபர் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக்குமார் என்பவர் விருதுநகர் ரோசன்பட்டியிலும் தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர்.
இதேபோன்று, விருதுநகர் சைபர் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாண்டித்துரை (22) என்பவர் மதுரை ஆண்டாள்புரத்திலும், அர்வர்தீன் (54) என்பவர் சென்னையில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டு இவரையும் அங்கு சென்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பதிவான சைபர் குற்ற வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த முகமது அர்சத் (21), முகமது ஜீன்சாத் (21), குமார் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.