கும்பகோணம்: கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீஸார் 6 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவா மணிகண்டன்(28). மினி பேருந்து ஓட்டுநரான, இவர், டிச.7-ம் தேதி, தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ள அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகில் பேருந்தை நிறுத்தி விட்டு, நடத்துநர் ரவியுடன் அருகில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்து விட்டு திரும்பிய போது, இருசக்கர வாகனம் ஒன்றில் முகமூடி அணிந்து வந்த 3 பேர், சிவா மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே சிவா மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, அவரது நண்பர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைத்து முகமுடி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடலை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, டிச.6-ம் தேதி இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பல்வேறு காரணங்களால் போலீஸார், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம், பலத்த போலீஸர் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், அய்யம்பேட்டையைச் சேர்ந்த சிலர் புறவழிச்சாலை வழியாகக் கஞ்சாவைக் கடத்தி வந்து சிவா மணிகண்டன் இருக்கும் பகுதியில் உள்ளவர்களிடம் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியினர், அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர். இது தொடர்பாக போலீஸார் அந்த 3 -ல் ஒருவரைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் வெளியில் வந்தவர், கடந்த 6-ம் தேதி இரவு சூரமங்கலம் பெட்ரோல் பங்கில் மினி பேருந்திற்கு டீசல் நிரப்பச்சென்ற சிவாவை பார்த்தவுடன், நீ பசுபதிகோவிலா எனவும், இவரும் உடந்தையாக இருந்தார் என நினைத்து சிறைக்கு சென்றவர் அவருடன் தகராறில் ஈடுபட்டார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அன்று இரவு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் சிவா புகாரளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மற்றும் அவரது நண்பர்கள், சிவாவை கொலை செய்திருக்கலாம். இந்தக் கொலை தொடர்பாக டிஎஸ்பி குமரவேலு தலைமையில் 5தனிப்படை அமைத்து சிசிடிவி மற்றும் செல்போன் பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில், முகமுடி கொலையாளிகள், சிவாவை கொலை செய்து விட்டு, கும்பகோணம் வரை அவர்கள் சென்றதற்கான அவர்களது செல்போன்கள் ஆக்டிவில் இருந்துள்ளது.
அதன் பிறகு செல்போனை ஸ்வீட்ச் ஆப் செய்ததால், எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை. மேலும், இந்தக் கொலை தொடர்பாக அவர்களுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் பல்வேறு உதவிகளைச் செய்த 6 பேரை பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.