மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு ஓராண்டாக பாலியல் துன்புறுத்தல் - சென்னையில் அதிர்ச்சி


சென்னை: சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு கடந்த ஓராண்டாக பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநருக்கு 21 வயதில் மகள் உள்ளார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால், மகளை தனது பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளார். இவரது மகள், சற்று மன வளர்ச்சி குன்றிவர். அதனால், 12-ம் வகுப்பு வரை மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

பின்னர், மன வளர்ச்சி குன்றியவர் என்ற சான்றிதழின் அடிப்படையில், அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவியை சேர்த்துள்ளார். 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி தினமும் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவியிடம் அதிக மாற்றத்தை அவரது தந்தை பார்த்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, மாணவியின் செல்போன் எண்ணுக்கு, குறிப்பிட்ட சில எண்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகள் வந்ததை கண்டு மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: மாணவியுடன் கல்லூரியில் படிக்கும் அரக்கோணத்தை சேர்ந்த தோழி மூலம், சில இளைஞர்கள் அவருக்கு பழக்கமாகி உள்ளனர். மேலும், சமூக வலைதளங்கள் மூலமும் திருப்பூர், கோவை, அம்பத்தூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலரும் அறிமுகமாகி, தினமும் செல்போன் மூலம் மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிக்கு பழக்கமான இளைஞர்கள், அந்த மாணவியை சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, விடுதியில் அறை எடுத்து தங்கி அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும், இது கடந்த ஓராண்டாக நடந்து வந்ததாகவும், பாதிக்கப்பட்ட அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை பலமுறை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல்ரீதியாக மாணவியை துன்புறுத்திருக்கலாம் என தெரிகிறது. மாணவியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம். தற்போது, மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது 2 இளைஞர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மற்றவர்களையும் தேடிப் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

x