மினி பேருந்து ஓட்டுநர் கொலை - அய்யம்பேட்டையில் பரபரப்பு


உறவினர்கள் போராட்டம் (இடது) | கொல்லப்பட்ட சிவா (வலது)

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், பசுபதி கோயில், திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சிவா மணிகண்டன் (28). மினி பேருந்து ஓட்டுநரான இவர் கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை வரை மினிப் பேருந்தை இயக்கி வந்தார். அந்தப் பேருந்ததை, தஞ்சாவூர்- கும்பகோணம், பிரதான சாலை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்த அருகில் ஓரமாக நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில், சிவா வழக்கம்போல் அந்த பேருந்தை நிறுத்துமிடத்தில் நிறுத்தினார்.

பின்னர் அவர் மற்றும் அந்தப் மினி பேருந்து நடத்துநர் ரவி ஆகியோர் அருகில் உள்ள கடைக்கு சென்று டீ அருந்திவிட்டு திரும்பினர். அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேர், சிவாவை நடுரோட்டில் இழுத்து தாக்கி, சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் அந்த இடத்திலேயே சிவா உயிரிழந்தார். இதனை அறிந்த அந்த பகுதியினர் கொலை காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில் போக்குவரத்து சுமார் 1.30 பணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தஞ்சாவூர் எஸ்பி ஆசிஷ்ராவத் மற்றும் போலீஸார் அந்த இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்த பகுதியினர் கூறியது, “பெட்ரோல் பங்க் அருகில் உயிரிழந்த சிவாவிற்கும், சிலருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று அய்யம்பேட்டை போலீஸாரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸார், கண்டுகொள்ளாததால் இந்த கொலை நடந்துள்ளது” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிவா மணிகண்டனின் உடலை போலீஸார் தஞ்சாவூர் மருதுவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாக அறிந்த சிவாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் மருத்துவமனை முற்றுகையிட்டு குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும், அய்யம்பேட்டை மருத்துவமனையிலேயே உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

x