சென்னை: ஐரோப்பிய நாட்டில் டேட்டா எண்ட்ரி வேலை என கூறி சைபர் மோசடி வேலைக்காக தமிழர்களை அனுப்பிய 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான செர்பியாவில் சமையல் உதவியாளர் பணி இருப்பதாக சென்னையை சேர்ந்த அப்துல்காதர், ஆண்டனி மற்றும் ஷோபா ஆகியோர் விளம்பரம் செய்துள்ளனர். இதை அறிந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர், அந்த வேலைக்காக ரூ.3 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்து, சுமார் ஒரு வருடமாக காத்திருந்துள்ளார். பின்னர், 2022-ம் ஆண்டு லாவோஸ் நாட்டின் டிரைஆங்கில் பகுதியில் வேலை இருப்பதாக கூறி, சங்கர் சர்காரை அங்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சீன நாட்டு நிறுவனத்தில் அவர் 2 ஆண்டுகளாக பணிப்புரிந்து வந்த நிலையில், எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், சீன நிறுவனத்தில் சைபர் மோசடி வேலை செய்வதற்கு, ஆட்களை கொண்டுவந்தால், கமிஷன் வழங்குவதாக சங்கர் சர்காரிடம், ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சங்கர் சர்கார், சென்னையை சேர்ந்த அப்துல்காதரை தொடர்புகொண்டு இதுகுறித்து அவரிடம் தெரிவித்துள்ளார்.
அப்துல்காதர், திருச்சியைச் சேர்ந்த தனது நண்பரான ஏஜெண்ட் சையது என்பவரை தொடர்புகொண்டு, டேட்டா எண்ட்ரி வேலை என கூறி 9 நபர்களை லாவோஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அங்கு 5 பேரிடம் மட்டும் குடியேற்ற அனுமதிக்காக எனக் கூறி அவர்களிடம் இருந்து மொத்தம் ஆயிரம் டாலரை சங்கர் சர்கார் வசூல் செய்துவிட்டு, அவர்களை ஜேம்ஸிடம் ஒப்படைத்து, அவரிடம் இருந்து 2 ஆயிரம் சீன கரன்சிகளை கமிஷன் தொகையாக பெற்றுள்ளார்.
பின்னர், ஜேம்ஸ் அவர்களை கட்டாயப்படுத்தி, சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த அருண் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சையது, அப்துல்காதர் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, சங்கர் சர்காரை தேடி வந்த நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி லாவோஸ் நாட்டிற்கு செல்ல முயன்ற, அவரை, கொல்கத்தா விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்து, நேற்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.