சென்னை: சென்னை மாநில கல்லூரியில் படித்து வந்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சந்துரு, ஈஸ்வர்,ஈஸ்வரன், யுவராஜ் ஆகிய 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த குற்றச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, 4 மாணவர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் தலா 2 பேர் 15 நாட்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, இவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் மீது இருக்கும் ரத்தத்தை துடைப்பது, விபத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆம்லென்ஸ்களில் வருபவர்களை ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்வது போன்ற சேவைகளை செய்து வருகின்றனர்.
நீதிமன்றம் வழங்கிய தண்டனையை பாராட்டிய சமூக ஆர்வலர்கள், “அவசர சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களை பார்க்கும் மாணவர்களுக்கு, மற்றவர்களை கத்தியால் வெட்டுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் வராமல் இருக்கும். மற்றவர்களின் வலியும், கஷ்டங்களும் புரியும்” என்று தெரிவிக்கின்றனர்.