சென்னை: ஆயிரம் விளக்கு, ரங்கூன் தெருவில் வசிப்பவர் சூசைராஜ் (50). தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றார். முன்னதாக வீட்டுசாவியை கையோடு எடுத்துச் சென்றால் தவறவிட்டு விடுவோம் என்ற எண்ணத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை திரும்பி வந்த அவர், பக்கத்து வீட்டில் கொடுத்திருந்த சாவியை திரும்பப் பெற்று கதவைத் திறந்து உள்ளே சென்றார். பின்னர் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது 100 பவுன் தங்கநகை மாயமாகி இருந்தது. அதிர்ச்சி, அடைந்த சூசைராஜ் பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று விசாரித்தார். அவர் தனக்கும் நகை மாயமானதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தார்.
இதைக் கேட்ட சூசைராஜ் நகை மாயமானது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்தும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.