திருச்சி: திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இயங்கி வந்த எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும் நிலம் தருவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முதலீடு பணத்தை திரும்பத் தராமல் பொதுமக்களை ஏமாற்றி வந்த எல்பின் இ.காம் தனியார் நிறுவனம், ஸ்பேரோவ் குளோபல் டிரேட் திருச்சி ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த திருச்சி மாவட்ட முக்கிய ஏஜென்ட் தொட்டியம், மகேந்திரமங்கலம், குடித்தெருவைச் சேர்ந்த ஆர்.சந்திரசேகர் (58) என்பவரை திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி டி.கே.லில்லி கிரேஸ், உதவி ஆய்வாளர் கு.மகாலட்சுமி மற்றும் போலீஸார் இன்று கைது செய்தனர். எல்பின், ஸ்பேரோவ் ஆகிய நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்து ஏமாந்திருந்தால் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் பொதுமக்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.