வாட்ஸ்ஆப் மூலம் வலை விரித்து தூத்துக்குடியில் ரூ.52.11 லட்சம் மோசடி:  கேரள நபர் கைது 


தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பி ஷேர் மார்க்கெட் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.52.11 லட்சம் பணம் மோசடி செய்த கேரளா நபரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று செய்தி வந்துள்ளது. அதனை நம்பி அந்த நபர், அவர்களை தொடர்பு கொண்டு அதில் குறிப்பிட்டுள்ளபடி முதலீடு செய்து முதலில் ரூ.4.4 லட்சம் பணத்தை லாபமாக பெற்றுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அந்த நபருக்கு தாங்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி முதலீடு செய்தால் இன்னும் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி www.irqql.com என்ற இணையதள இணைப்பை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து மேற்படி நபர் அதை கிளிக் செய்து அதில் வந்த, எப்எச்டி (FHT) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியின் மூலம் ரூ.52.11 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், லாபம் எதுவும் வரவில்லை. இதனால், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த நபர் இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பதிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பரட் ஜான் உத்தரவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி (பொ) எடிசன் மேற்பார்வையில் ஆய்வாளர் சாந்தி தலைமையில் தனிப்படை அமைத்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கேரள மாநிலம் மலப்புரம் இடவான பகுதியைச் சேர்ந்த அப்துல்லா பச்சபரம்பன் மகன் அஜ்மல் (45) என்பவர் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா சென்று அஜ்மலை கைது செய்தனர். தொடர்ந்து அவரை தூத்துக்குடி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பகுதி நேர வேலை, ஷேர் மார்க்கெட் டிரேடிங், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.

x