ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது


ஸ்ரீவில்லிபுத்தூர்: தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த ராம்குமார் (34) என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). கடந்த மே மாதம் 21ம் தேதி கோயிலில் சிலை வைப்பது தொடர்பான தகராறில் ராம்குமார் குடும்பத்தினர் தாக்கியதில் ராமர் (60) என்பவர் உயிரிழந்தார். இது குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராம்குமார், அவரது தந்தை ராமசாமி, அண்ணன் ராஜேந்திரன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் காவல் ஆய்வாளர் சத்யசீலா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ராம்குமார் கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கில் முன் ஜாமின் பெற்றார். கடந்த நவம்பர் 16ம் தேதி ஶ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆபாசமாக பேசி, மிரட்டிய புகாரில் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும், ராம்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி கண்ணன் பரிந்துரை செய்தார். ராம்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதையடுத்து, விருதுநகர் மாவட்ட சிறையில் இருந்த ராம்குமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

x