மதுரை: மதுரை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்பந்த ஆசிரியர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அவர் போக்சோ வழக்கில் சிக்கியதாக போலீஸார் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து அப்பள்ளியில் பணியாற்றிய நிலையில், சில தினத்திற்கு முன்பு மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் நேரில் புகார் அளித்தார். இதனிடையே, ஆட்சியரின் உத்தரவின்பேரில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குநர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில் உசிலம்பட்டி மகளிர் போலீஸாரும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ‘போக்சோ’ சட்டத்தில் ஒப்பந்த ஆசிரியர் மூர்த்தி (59) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, தலைமறைவான ஆசிரியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வழக்கில் சிக்கிய ஆசிரியரின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: “ஆசிரியர் மூர்த்தி எம்.ஏ., பி.எட்., பட்டதாரி. இவர், கடந்த 1992-ல் 8 ஊர் கிராம கமிட்டியால் கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எந்த ஆசிரியர் விடுமுறையில் சென்றாலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாடத்தை எடுப்பதில் வல்லவராக இருந்துள்ளார். மாதச் சம்பளம் ரூ.18 ஆயிரம் என்றாலும், 9, 10, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 400 பேருக்கு மேல் பள்ளியிலேயே டியூசன் எடுத்துள்ளார்.
இதன்மூலம் தலா ஒருவரிடம் ரூ.150 முதல் ரூ.200 வரை டியூசன் கட்டணமும் வசூலித்து இருக்கிறார். இப்பள்ளியில் 1992ல் பணியில் சேர்ந்த நேரத்தில் மூர்த்தி முயற்சித்து இருந்தால் அரசு பள்ளியில் வேலைக்கு சென்றிருக்கலாம். ஆனாலும், அவர் அதற்கு முயற்சி எடுக்காமல் இப்பள்ளியிலேயே குறைந்த சம்பளத்தில் இருந்து கொண்டு, டியூசன் எடுப்பதன் மூலம் அதிக பணமும் சம்பாதித்து இருப்பது தெரிகிறது.
பள்ளி வளாகத்தில் ஒரு மாணவி சக மாணவருடன் பேசிக்கொண்டால் அதை தெரிந்து கொண்டு ‘உனது பெற்றோரிடம், அந்த மாணவரை காதலிப்பதாக கூறுவேன்’ என, சம்பந்தப்பட்ட மாணவியை மிரட்டி சில மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு, சில்மிஷங்களை செய்திருப்பதும் விசாரணையில் தெரிகிறது.
கடந்த 2013-ல் மாணவி ஒருவரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாக மூர்த்தி மீது ‘போக்சோ’ வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் விடுதலை பெற்றதால், கிராமக் கமிட்டி, அவர் மீது நம்பிக்கை வைத்து, மீண்டும் அவரை அதே பள்ளியில் பணியில் சேர்த்துள்ளனர். இந்த வாய்ப்பை மூர்த்தி தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.
இதன் மூலமே மூர்த்தி நல்லவர், அவருக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என கிராம கமிட்டியினர் அப்பள்ளி மாணவர்கள் சிலரை திரட்டி போராட்டமும் செய்திருக்கின்றனர். ஆசிரியர் மூர்த்தி ஏற்கெனவே போக்சோ வழக்கில் சிக்கியதால் தற்போதைய சம்பவத்திலும் அவருக்கு சம்பந்தம் இருக்கலாம். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் அவரை தொடர்ந்து தேடுகிறோம்" என்று போலீஸார் கூறினர்.