கரூரில் சட்டவிரோத மணல் குவாரி நடத்திய 14 பேர் மீது வழக்கு: ரூ.4.95 கோடி அபராதம்


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: கரூர் அறியாற்றில் சட்டவிரோத மணல் குவாரி நடத்தியது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.4.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கத் தலைவர் சுடலை கண்ணு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா வடசேரி கிராமத்தில் அமைந்துள்ள அரியாறு ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. இப்பகுதியில் சட்டவிரோதமாக தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களைக் கொண்டு 10 மீட்டர் ஆழத்திற்கு தோண்டி மணல் அள்ளப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அரசுக்கு ரூ.50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மணல் கடத்தலுக்கு அரசு அதிகாரிகளும், கனிமவளத் துறை அதிகாரிகளும் துணை போகின்றனர். எனவே, வடசேரி கிராமத்தின் அரியாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வரும் சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கவும், சட்டவிரோத மணல் குவாரிக்கு துணை போகும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "சட்டவிரோத மணல் குவாரி நடத்திய 14 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறி மணல் அள்ளியதற்காக 4.95 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் விதி மீறி வைகை ஆற்று படுகையில் குவாரி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கனிம வளத்துறை இணை இயக்குனர், வருவாய்த் துறை, காவல்துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை 2025ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

x