‘ரேஷன் கடை வேலைக்கென ரூ.26 லட்சம் வாங்கி முறைகேடு’ - மதுரை போலீஸிடம் புகார்


இருப்பினும், ரேசன் கடை வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த நபர்களை திருமுருகன் புகார் அளிக்க உடன் அழைத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம். கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரையில் ரேசன் கடைகளில் வேலைக்கென முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் உதவியாளராக இருப்பதாக கூறி, ரூ.26 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக கல்வித்துறை ஊழியர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (58). அதிமுக பிரமுகர் ராஜாராம் என்பவருக்கு எதிராக முறைகேடு புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: "மதுரையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவியாளராக பணிபுரிகிறேன். ரேசன் கடையில் எடையாளர் உள்ளிட்ட வேலைக்காக மதுரையைச் சேர்ந்த ரஞ்சித், தமிழரசன், தினேஷ்குமார், சுபாஷ், முத்துகாமு, விஜயகுமார் (மாற்றுத்திறனாளி), கார்த்திக் ஆகியோரிடம் ரூ.26 லட்சம் பணம் வசூலித்து, முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் என, கூறப்பட்ட பழங்காநத்தம் அதிமுக பிரமுகர் ராஜாராமிடம் கொடுத்தேன். அவர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதற்கிடையில், 2021 மே மாதத்தில் ராஜாராம், முருகானந்தம் ஆகியோர் என்னிடம் போனில் பேசினர்.

பழங்காநத்தம் பகுதிக்கு வரச்சொல்லி என்னை தாக்கினர். அப்போது, அவர்களிடம், நீங்கள் தானே ரேசன் கடையில் 7 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் வாங்கிவிட்டு, தரவில்லை என கேட்போது, என்னை மிரட்டி, ரூ.20 பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். என்னை தாக்கிய ராஜாராம், முருகானந்தம் என்ற ஆனந்த் மற்றும் 4 பேர் மீது நடவடிக்கை எடுத்து ரேசன் கடை வேலைக்காக நான் வசூலித்து கொடுத்த ரூ.26 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும். எனக்கு பாதுகாப்பு வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பிரமுகர் ராஜாராமிடம் கேட்டபோது, "வாடிப்பட்டி பகுதியிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் திருமுருகன் உதவியாளராக வேலை பார்க்கிறார். அவருடன் பணியாற்றும் நபர்களிடம் பணத்தை வாங்கி கூடுதலாக வட்டிக்கு கொடுப்பது அவரது தொழில். இருப்பினும் அவசர தேவைக்கென அவரிடம் 2021ல் ரூ.15 லட்சம் வாங்கினேன். அதற்குரிய தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆனாலும், அவர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் அவரை வரவழைத்து விசாரித்தனர். பணம், கொடுக்கல் வாங்கல் விவகாரம் முடிக்கப்பட்டு, அவரே பணத்தை திரும்ப பெற்று கொண்டதாக கடிதம் எழுதி கொடுத்தார். பழங்காந்தம் பகுதி வட்டச் செயலாளர், கட்சிக்காரர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சரை சந்தித்து இருக்கிறேன். அவரிடம் நான் உதவியாளராக இல்லை. முன்னாள் அமைச்சருக்கு எதிரானவர்கள் தூண்டுதலில் திருமுருகன் புகார் அளித்திருக்கலாம்" என்று ராஜாராம் கூறினார்.

x