சென்னை: ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.4.25 கோடி மதிப்புள்ள கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரா- ஒடிசா எல்லையிலிருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஒன்றை மறித்தனர். லாரியை சோதித்தபோது அதற்குள் காய்ந்த மிளகாய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மூட்டைகளுக்கு இடையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அ்வ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 848 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.4.25 கோடி ஆகும். இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த சிவா, பார்த்தசாரதி, தினேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், இவர்களின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.