ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (26). இவரும், அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த பாலராம்கி (32) என்பவரும் இருசக்கர வாகனத்தில் இன்று (டிச.3) ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து தங்களது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் களக்குடி விலக்கு அருகே ராமேசுவரத்திலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில், கார்த்திக் மற்றும் பாலராம்கி ஆகியோர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடல்களையும் மீட்ட ஆர்.எஸ். மங்கலம் போலீஸார் உடற்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கார்த்திக்கு ஜெயலெட்சுமி என்ற மனைவியும், இரண்டரை வயதில் மகனும் உள்ளனர்.
ஜெயலெட்சுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். பொறியியல் பட்டதாரியான பாலராம்கிக்கு திருமணமாகவில்லை. ஆர்.எஸ். மங்கலம் போலீஸார் அரசு பேருந்து ஓட்டுநர் அரியலூர் மாவட்டம் கள்ளத்தூரைச் சேர்ந்த சிதம்பரம் (58) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.