மீஞ்சூர் அருகே உடற்பயிற்சியின்போது இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு


பொன்னேரி: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் உடற்பயிற்சியின் போது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (35). இவர், வல்லூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகாத இவர் நாள்தோறும் காலை வல்லூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில், பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று காலை வினோத்குமார், தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, உடற்பயிற்சி கூடத்தில் இருந்தவர்கள் வினோத்குமாரை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற வினோத்குமார், மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், வினோத்குமார் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x