நெல்லை: திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்தவர் விஜய் (வயது 25). இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா கீழ தெருவை சேர்ந்த புஷ்பராஜ் என்ற சிம்சனின் சகோதரி ஜெனிபர் சரோஜாவை (23) காதலித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஜெனிபர் சரோஜா தனது காதலனை பார்ப்பதற்காகவும் அவரோடு சேர்ந்து வாழ்வதற்காகவும், வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சிக்கு சென்றதாக தெரிகிறது. ஏற்கெனவே விஜய்யின் சகோதரி கணவரைப் பிரிந்து அங்கே வாழும் நிலையில் ஜெனிபர் சரோஜாவிற்கு புத்திமதி சொல்லி அவரை மீண்டும் திருநெல்வேலிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுரை கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் காதலனைமறக்க முடியாமல் வாழ்ந்து வந்த ஜெனிபர் சரோஜா, கடந்த 28 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த சரோஜாவின் சகோதரர் புஷ்பராஜ் என்ற சிம்சன், விஜய்யை திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக நம்பி இன்று காலை ரயில் மூலம் விஜய் திருநெல்வேலி வந்தடைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு ரயில் நிலையத்திலிருந்து புஷ்பராஜ் என்ற சிம்சனின் நண்பர் சிவா வாடகைக்கு குடியிருக்கும் சாந்தி நகர் 24வது தெருவிற்கு அழைத்து வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பழைய கட்டிடப் பொருட்களைக் கொண்டு தாக்கியும் அரிவாளால் வெட்டியும் விஜய்யை படுகொலை செய்துள்ளனர். விஜய்யின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து பாளையங்கோட்டை போலீஸார், திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஆனந்தி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி கைரேகைகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றி சென்றுள்ளார். பாளையங்கோட்டை காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட புஷ்பராஜ் என்ற சிம்சன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் காதலால் தனது உயிரை இழந்துள்ளார்.