தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனையால் பரபரப்பு


தூத்துக்குடி விமான நிலையம் (கோப்புப் படம்)

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானம் வந்தது. இதில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் மகேஷ் ககாடா வந்துள்ளார். அவர் அங்கிருந்து காரில் திருச்செந்தூர் புறப்பட்டு சென்றுள்ளார். முன்னாள் அமைச்ர் மகேஷ் ககாடாவுக்கு ஏற்கெனவே நக்சல்கள் அச்சுறுத்தல்கள் உள்ளதால், மத்திய அரசு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதனால் இன்று பகல் முழுவதும் தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்க செய்யும் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே பகலில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அனைத்து பாதுகாப்பு துறையினரும் உஷார் படுத்தப்பட்டனர். ஏற்கெனவே காலையில் வந்த விமானத்துக்கு பின்னர் புயல் காரணமாக சென்னை-தூத்துக்குடி, தூத்துக்குடி -சென்னை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இருப்பினும் விமான நிலையத்தில் எங்கும் எந்த வெடி பொருளும் கிடைக்கவில்லை. இருப்பினும் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, மதியம் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் 2.45 மணிக்கு பதிலாக மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ந்து விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நாளை (டிச.1) காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு காலை 7.15 மணிக்கு வந்தடையும் விமானமும், இங்கிருந்து 7.45 மணிக்கு சென்னை செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் வழக்கம் போல தூத்துக்குடி வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x