இலங்கை கடற்படையினர் அளித்த தகவலின் அடிப்படையில், சர்வதேச கடல் பகுதியில் 2 படகுகளில் கடத்தப்பட்ட 500 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்த இந்திய கடற்படையினர், இது தொடர்பாக 9 பேரை கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்நாட்டு கடற்படை சார்பாக, கொழும்பு கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து, இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் ஒருங்கிணைப்பு மையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தியப் பெருங்கடலில் ரோந்துப் பணியிலிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான சாரதா ரோந்துக் கப்பல் மற்றும் ஐஎன்ஸ் ஹெலிகாப்டர், ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தியப் பெருங்கடல் வழியாக வந்த ஒரு படகை கடந்த 24-ம் தேதியும், அரபிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த மற்றொரு படகை கடந்த 25-ம் தேதியும் இந்திய கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகுகளில் இருந்த 500 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, 2 படகுகள், 500 கிலோ போதைப் பொருள், கைது செய்யப்பட்ட 9 பேரை இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிராந்திய கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே உருவாக்கப்பட்ட பிணைப்புகளை மீண்டும் இந்த கூட்டு நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது