கல்வராயன்மலை: சமையல் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்


கல்வராயன்மலை உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர் ஒருவர் விறகு சுமந்து செல்கிறார்.

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் சமையல் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்தியதாக பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் சமையலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் வெள்ளிமலை அருகே உள்ள இன்னாடு கிராமத்தில் இயங்கி வரும் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் காலை உணவு அருந்திய பள்ளி மாணவ, மாணவியர்கள் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவருந்திய பின், தாங்கள் சாப்பிட்ட தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களை மாணவியரே சுத்தம் செய்ய சமையலர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் விறகு கட்டைகளை சுமந்து வந்து சமையல் கூடம் அருகே அடுக்கி வைக்கவும் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மாவட்ட ஆட்சியர், பள்ளியில் நிலவும் நிலை குறித்து விசாரணை நடத்த மாவட்ட பழங்குடியின திட்ட அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விசாரணை அலுவலர் பி.டி. சுந்தரம் விசாரணை நடத்தி, பள்ளித் தலைமையாசிரியர் செபாஸ்டியன் மற்றும் பள்ளியின் சமையலர் ராதிகா ஆகிய இருவரையும் இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாணவிகளை பாத்திரங்களை கழுவவேண்டுமென விடுதி பணியாளர்கள் கட்டாயப் படுத்துவதாகும் ஒரு சில நேரங்களில் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவிகளை விடுதியில் உள்ள உணவு பாத்திரங்களை கழுவ வற்புறுத்தியவர்கள், கட்டாயப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கல்வராயன் மலைவாழ் மக்கள் அதிகாலையில் 6 மணிக்கு வேலைக்கு சென்றால் மாலை 7 மணி அளவில் தான் வீட்டுக்கு வருவார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில், மலைவாழ் பழங்குடியின மக்கள் இதுபோன்ற உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்களை படிக்க வைத்து வருகின்றனர். ஆனால் அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களை உணவு பாத்திரங்களை கழுவ வேண்டும் என கட்டாயப்படுத்தி வேலை வாங்கி இருப்பது கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

x