மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கிளியாற்றில் இறங்கிய கத்திரிச்சேரி கிராமத்தை சேர்ந்த சிறுவன், ஆற்றில் தவறி விழுந்து பள்ளத்தில் சிக்கி மாயமான நிலையில், மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் தேடும் பணிகளை மேற்கொண்டு சிறுவனை சடலமாக மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கத்திரிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் பிரபாகரன் (8). மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரபாகரன் வீட்டின் அருகில் உள்ள நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இ்ந்நிலையில், கிளியாற்றங்கரை பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். பின்னர், கால்களை கழுவுவதற்காக, கிளியாற்றில் இறங்கிய போது கால் இடறி ஆற்றில் விழுந்துள்ளார்.
இது தெடர்பாக, தகவலறிந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இதில், சில மணி நேரத்துக்கு பிறகு ஆற்றிலிருந்து சடலமாக சிறுவன் பிரபாகரன் மீட்கப்பட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.