கோவை: கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மர வியாபாரி சஜீவனிடம் போலீஸார் இன்று (நவ.28) விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கும் பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக எஸ்.பி மாதவன், கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான கோவை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சாட்சியங்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என ஏராளமானோரிடம் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து போலீஸார் விசாரித்துள்ளனர்.
விடுவிக்க போலீஸாரிடம் வலியுறுத்தல்: நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் சஜீவன். மர வியாபாரியான இவர், அதிமுகவில் வர்த்தகர் அணியில் மாநில நிர்வாகியாகவும் உள்ளார். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர், அதில் ஈடுபட்டவர்கள் கேரளா தப்பிச் செல்ல முயன்ற போது, கூடலூர் சோதனைச் சாவடியில் பிடிபட்டனர். அச்சமயத்தில், பிடிபட்டவர்களுக்கு ஆதரவாக சஜீவன், சோதனைச் சாவடியில் இருந்த போலீஸாரை தொடர்பு கொண்டு பிடிபட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளையும் சஜீவன் செய்து கொடுத்துள்ளார். கொள்ளையில் ஈடுபட்டு தப்பிக்க முயன்று பிடிபட்டவர்களை ஏன் விடுவிக்க வலியுறுத்தினார் என்ற கேள்வியும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. அதனபடிப்படையில், சஜீவனிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டனர்.
அதன்படி, நவம்பர் 5-ம் தேதி ஆஜராகுமாறு சஜீவனுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கூடலூரில் கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடியதாக கூடலூர் போலீஸாரும் சஜீவன் மீது வழக்குப் பதிந்திருந்தனர். இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் பிணை பெற்ற அவர், சமீபத்தில் கூடலூருக்கு திரும்பினார். அதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீஸார் மீண்டும் சம்மன் வழங்கினர். இதையடுத்து, கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சஜீவன் இன்று (நவ.28) காலை ஆஜரானார். அவரிடம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
பல்வேறு கேள்விகள் குறித்து விசாரணை: கோடநாடு எஸ்டேட் தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாகவும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டது எப்படி தெரியும், எதற்காக அவர்களை விடுவிக்க போலீஸாரிடம் வலியுறுத்தப்பட்டது, அவர்களை விடுவிக்க சொல்லி பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் போலீஸார் கேட்டு விசாரித்தனர். மாலை விசாரணைக்கு பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.