கூடலூரில் சுருக்கில் சிக்கி ஆண் புலி உயிரிழப்பு: மூன்று பேர் கைது


கூடலூர்: கூடலூரில் சுருக்கில் சிக்கி ஆண் புலி உயிரிழந்த விவகாரத்தில் சுருக்கு வைத்ததாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட செலுக்காடி பகுதியில் காப்பு காட்டை ஒட்டி 3 வயது ஆண் புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்தது. கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, யாரோ சிலர் வனவிலங்கை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்துத்துள்ளனர்.

அதில் புலி சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. வனத்துறையினர், புலி இறந்து கிடந்த இடத்தில் உள்ள தனியார் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் மக்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சுருக்கு வைத்ததாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:"புலி சுருக்கு கம்பியில் சிக்கியதால் மரணம் நிகழ்ந்தது என அடையாளம் காணப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் காட்டுப் பன்றிக்கு வலை வைக்கப்பட்டுள்ளது. கூடலூர் யானைசேதக் குழியை சேர்ந்த மணிகண்டன் (36), மாரிமுத்து (33), வேடன்வயல், தட்டக்கொல்லி காலனியை சேர்ந்த விக்னேஷ் (32) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு பல போலீஸ் வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர் மற்றும் பிற வழக்குகள் இன்னும் அவர்கள் மீது நிலுவையில் உள்ளன.

விசாரணையில், அப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக இந்த குற்றத்தை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா தலைமையில் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது, கண்ணிக்கு பயன்படுத்தப்பட்ட இதேபோன்ற கேபிள் வயர்கள் கைப்பற்றப்பட்டதுடன், சில இடங்களில் அவர்களின் வீடுகளைச் சுற்றியும் கண்ணிகளும் மீட்கப்பட்டுள்ளன” என்று வெங்கடேஷ் கூறினார்.

x