மதுரை: பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் ஆட்சியர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டு, சிகரெட் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா, இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட ஆய்வை, மதுரை தெற்கு வட்ட பகுதிகளில் மேற்கொண்டார். அங்கு பள்ளிகள் அருகில் இருந்த கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது தடை செய்யப்பட்ட அப் பகுதியில் சிகரெட் விற்பனை செய்த ஒரு கடையில் இருந்த சிகரெட்டுகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை வைத்திருந்த கடைக்கு ரூபாய் ரூ.2000 அபராதமும், சுகாதார குறைபாடு உள்ள ஒரு கடைக்கு ரூபாய் ரூ.1000 கள அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அப்பகுதியில் உணவுப் பாதுகாப்பு துறையின் சார்பில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நடத்தப்பட்ட உணவு பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இலவசப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு உணவு வணிகர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியதுடன் அங்கிருந்த வணிகர்களுக்கு உடனடி உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கினார்.