கூகுள் மேப்பை நம்பி காரில் பயணித்த 3 பேர் ஆற்றில் விழுந்து பலி - அதிகாரிகளிடம் விசாரணை


புதுடெல்லி: கூகுள் மேப்பின் வழியைப் பின்பற்றி சென்ற கார் முழுமையடையாத பாலத்தில் இருந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க இந்திய அதிகாரிகளுக்கு உதவுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு காரில் 3 பேர் சென்றனர். கூகுள் மேப்பில் வழியை பார்த்தபடி சென்ற இவர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து ராமகங்கை ஆற்றில் காருடன் கீழே விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து கூகுள் மேப் செயலியின் அதிகாரி மற்றும் அரசாங்க பொதுப்பணித் துறையைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார் விசாரித்தனர்.

"அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். இதுகுறித்து விசாரணையில் நாங்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். மேலும் இந்த சிக்கலை விசாரிக்க எங்கள் ஆதரவை வழங்குகிறோம்" என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுகிழமை உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில், கூகுள் மேப் கூறிய தவறான தகவல்களால் மூன்று பேர் உயிரிழந்தனர். வாகன ஓட்டிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்கு சென் திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களுக்கு, முழுமையடையாத மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது.

இவர்கள் கூகுள் மேப்ஸ் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில், கார் கீழே விழுந்ததில் அதில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர்.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கேரளாவில் இரண்டு மருத்துவர்கள் சென்ற கார், கூகுள் மேப் செயலியைப் பின்தொடர்ந்த நிலையில், பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

x