சென்னை: லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை அண்ணாசாலை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கணேஷ் (30). இவர் கடந்த 24-ம் தேதி லாரியில் சரக்குகளை ஏற்றி கொண்டு, சென்னை, கோபாலபுரம் பகுதியில் உள்ள குடோன் அருகே லாரியை நிறுத்திவிட்டு, சத்யம் திரையரங்கம் அருகேயுள்ள டீக் கடையில் டீ குடிக்க சென்றார்.
அப்போது, அங்கு வந்த 2 பேர் கணேஷிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென கத்தி முனையில் மிரட்டி அருகில் மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பணம், செல்போனை கேட்டனர். அவர் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் தலையில் கட்டை, பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு கணேஷிடமிருந்த செல்போன் மற்றும் வெள்ளிச் செயினை பறித்து தப்பினர். பலத்த காயம் அடைந்த கணேஷ் சிகிச்சைக்கு பின்னர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் போலீார் துப்பு துலக்கினர். இதில், கணேஷை தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டது அண்ணாசாலையைச் சேர்ந்த விஜய்பிரபு (27), ஆயிரம் விளக்கு ரங்கன் தெருவை சேர்ந்த டேவிட் என்ற வினோத் (32) என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.