ஆவடி: ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில்நிலையத்தில் மதுபோதையில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை இன்று ஆவடி ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்( 54). பட்டாபிராம்- கோபாலபுரம் துணை மின்நிலையத்தில் 'லைனிங் இன்ஸ்பெக்டராக' பணிபுரிந்து வரும் இவர், இன்று மாலை பணி முடிந்து மின்சார ரயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக இந்து கல்லூரி ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, முதல் நடைமேடையில் மதுபோதையில் சுற்றித் திரிந்த 4 இளைஞர்கள், பிளாஸ்டிக் பைப்பால், அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக் கேட்ட பரமசிவத்தை, போதை இளைஞர்கள் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கினர். இதில், தலை மற்றும் வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட பலத்த காயமடைந்தார் பரமசிவம். இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீஸார் சம்பவ இடம் விரைந்து, பரமசிவத்தை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பரமசிவம், சென்னை- அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆவடி ரயில்வே போலீஸார், பரமசிவம் உள்ளிட்ட ரயில் பயணிகளை தாக்கியது தொடர்பாக பட்டாபிராம்- சித்தேரிக்கரை, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுபாஷ்(20), இப்ராஹீம்(23) மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.