சென்னை: வண்ணாரப்பேட்டை சிபி சாலை, சுரங்கபாலம் அருகே காரில் விலை உயர்ந்த மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதித்தபோது அதில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் காரிலிருந்த ராயபுரம், மரியதாஸ் தெருவைச் சேர்ந்த பஷீர் அகமது (51), வளசரவாக்கம், திருப்பதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஹரிஷ்பாபு (50) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைது செய்யப்பட்ட பஷீர் அகமது மீது ஏற்கனவே வேளச்சேரி மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில்தலா 1 போதைப் பொருள் வழக்குஉள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.