அந்தமான் கடல் பகுதியில் ஊடுருவிய மீன்பிடி படகில் 6,000 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் பிடிபட்டது. அதில் வந்த மியான்மரைச் சேர்ந்த 6 பேரை கடலோர காவல் படை பிடித்து அந்தமான் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை உ யர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கக் கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சந்தேகிக்கும் வகையில் மீன்பிடி படகு ஒன்று ஊடுருவியது. அதை நிறுத்தும்படி கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அந்தப் படகு நிற்காமல் சென்றது. இதையடுத்து கடலோர காவல் படையின் விரைவு ரோந்து படகு, பேரன் தீவு நோக்கி சென்று மீன்பிடி படகை போர்ட் பிளேர் இழுத்து வந்தது.
அந்த படகில் கடலோர காவல் படையினர் சோதனை செய்தபோது, தலா 2 கிலோ எடையில் 3,000 பாக்கெட்டுகள் இருந்தன. அவை மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் என ஆய்வில் தெரிந்தது. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடலோர காவல் படை இதுவரை மேற்கொண்ட சோதனையில் இது மிகப் பெரிய பறிமுதலாக இருக்க வாய்ப்புள்ளது.
மீன்பிடி படகில் வந்த மியான்மரைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப் பொருள் இந்தியா அல்லது அண்டை நாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக கடத்திவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக கூட்டு விசாரணை மேற்கொள்ள அந்தமான் நிக்கோபார் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 2019 மற்றும் 2022-ம் ஆண்டுகளில், போதைப் பொருட்களுடன் இந்திய கடல் பகுதியில் நுழைய முயன்ற வெளிநாட்டு படகுகள் பிடிபட்டுள்ளன.