தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியவர் மீது நடவடிக்கை கோரி வழக்கு - என்ஐஏ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


சென்னை: சர்வதேச தொழில்களில் முதலீடு செய்வதாகக்கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சாந்திகுமாரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "செங்குன்றத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சர்வதேச அளவிலான தொழில்களி்ல் முதலீடு செய்வதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று தேச விரோத செயல்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் பயன்படுத்தி வருகிறார். என்னிடமும் பணம் பெற்ற அவர், பெங்களுரு பகுதியைச் சேர்ந்த ரியாஷ் அகமது, மும்பையைச் சேர்ந்த முகமது அமீர், மண்ணடியைச் சேர்ந்த முகமது அன்சர் ஆகியோர் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக செங்குன்றம் காவல் நிலையம் மற்றும் தேசிய புலானாய்வு முகமைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய விசாரணை நடத்த தேசிய புலானாய்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் செங்குன்றம் போலீஸார் பதிலளி்க்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.19-க்கு தள்ளிவைத்துள்ளார்.

x