கரூர்: பஞ்சப்பட்டியில் கடந்த அக்.13ம் தேதி கரூரை சேர்ந்த பீடி, சிகரெட் விற்பனை நிறுவன ஓட்டுநர் விற்பனையை முடித்து கொண்டு வேனில் கரூர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வடவம்பாடியை அடுத்த பூலாம்பாடி 4 ரோடு அருகே அடையாளம் தெரியாத 2 பேர் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து மினி வேனை மறித்து அவர்களிடமிருந்து ரூ.3.87 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில், பீடி, சிகரெட் நிறுவனத்தின் வாகன ஓட்டுநர் கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், வாகன ஓட்டுநர் பாஸ்கர்(28) தான் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், கொள்ளைக்கு உதவியாக இருந்த கரூர் மாவட்டம் பாகநத்தத்தைச் சேர்ந்த தரண்ராஜ் (22), தமிழரசன் (23), உடந்தையாக இருந்த கரூர் தாந்தோணிமலை வஉசி தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் (24) ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும், கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்ற குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கொள்ளை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கரூர் எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி பரிசுகள் வழங்கினார்.