சென்னை: தலைமை செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை மாயமானது குறித்து வேளச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வேளச்சேரி விஜிபி செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (43). தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது கணவர் நாவலூரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். இவர்களது குழந்தையை கவனித்துக் கொள்ள தனியார் ஏஜென்சி மூலம் பிரேமா பிரெசினா என்ற பெண் கடந்த ஜனவரி 1-ம் தேதி வேலைக்கு சேர்ந்தார்.
செப்டம்பர் 1-ம் தேதி வரை அவர் வேலை பார்த்துள்ளார். பின்னர், கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி அவர் வேலையை விட்டு நின்றுள்ளார். இதையடுத்து மறுநாள் சரஸ்வதி என்பவர் வேலையில் சேர்ந்து குழந்தையை கவனித்து வந்தவர் அவரும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் வேலையைவிட்டு நின்றுள்ளார். இதையடுத்து நளினி என்ற பெண் வேலைக்கு சேர்ந்து பணிப் பெண்ணாக கவுசல்யா வீட்டில் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் கவுசல்யா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பீரோவில் இருந்த நகைகளை அண்மையில் எடுத்து பார்த்தபோது அதில் 17 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், கவுசல்யா வீட்டில் தற்போது பணி செய்த மற்றும் முன்பு பணி செய்த பணிப் பெண்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.