கோவை: கோவை விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் விவகாரம் காரணமாக, காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரளாவில் இருந்து கோவை வழியாக புதுடெல்லி செல்வதற்காக கடந்த 17-ம் தேதி கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார். அவரை வழியனுப்ப, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளும், ஐஎன்டியுசி மாநில தலைவர் கோவை செல்வன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளும் வந்திருந்தனர். அப்போது, கோவை செல்வன் தரப்பிலான காங்கிரஸ் நிர்வாகிகள், மயூரா ஜெயக்குமார் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து, பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், இரு தரப்பினரும், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, மயூரா ஜெயக்குமார் தரப்பினருக்கும், கோவை செல்வன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி திட்டிக் கொண்டனர். அப்போது மயூரா ஜெயக்குமார் ஆபாசமாக மிரட்டல் விடுத்து பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் இரு தரப்பினரையும் பிரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஐஎன்டியுசியைச் சேர்ந்த கோவை செல்வன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், ‘தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில், பீளமேடு போலீஸார், மயூரா ஜெயக்குமார், அவருடன் வந்த நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.