திருப்பூர் பனியன் நிறுவனரிடம் ரூ.10 கோடி மதிப்பிலான ஆடை வாங்கி மோசடி செய்தவர் கைது


திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் ரூ. 10 கோடி மதிப்பிலான ஆடைகளை பெற்று, பணம் தராமல் ஏமாற்றிய சேலத்தை சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் சொர்ணபுரி லே-அவுட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறி, இணையம் மூலம் திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்களை அணுகி உள்ளார். இதில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 10 கோடி அளவிலான ஆடைகளை பெற்று பணம் தராமல் ஏமாற்றி உள்ளார். தொடர்ந்து ஏராளமானோர் ஏமாற்றப்பட்ட நிலையில், திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர் ஒருவர் பாலமுருகன் குறித்து மாநகர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் அளித்தார்.

அந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு இன்று (நவ.23) பாலமுருகன் வந்தார். இதையடுத்து தகவல் அறிந்த பனியன் உற்பத்தியாளர்கள் சேர்ந்து பாலமுருகனை பிடித்து, வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.

x