சென்னை: தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று மாலை இந்த ஏடிஎம்-க்கு வந்த இருவர், ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டம்விட்டு, சுத்தியலால், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதற்குள் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள், ஏடிஎம் மையத்துக்குள் பார்த்தனர். தப்பி ஓட முயன்றவர்களை விரட்டிச் சென்ற பொதுமக்கள், கொள்ளையர்களில் ஒருவரை பிடித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தலைமறைவானார்.
போலீஸ் விசாரணையில் பிடிபட்டது சென்னை மந்தை வெளியை சேர்ந்த கார்த்திக் (35) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார், தப்பியோடிய அவரது கூட்டாளியான அதேபகுதியைச் சேர்ந்த சின்னா (35) என்பவரை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.