செங்குன்றம் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது


கைது செய்யப்பட்ட சுரேஷ்

செங்குன்றம்: செங்குன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த வங்கி கிளையில் இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர், ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வங்கி கிளையின் அலாரம் ஒலித்ததையடுத்து, வங்கி கிளை மேலாளர் வீட்டிலிருந்தபடியே செங்குன்றம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடம் விரைந்த செங்குன்றம் போலீஸார், வங்கி கிளையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, ஆவடி அருகே உள்ள வீராபுரம், ஓம் சக்தி நகரை சேர்ந்த சுரேஷ் (45) என்பவரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுரேஷிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். இந்த கொள்ளை முயற்சியின் போது வங்கி கிளையின் அலாரம் ஒலித்ததால் பல கோடி ரூபாய் பணம் மற்றும் வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகள் தப்பியுள்ளன.

x