திருச்சி: திருச்சி கருமண்டபத்தில் வசிக்கும் காந்தி மார்க்கெட் லாரி ஓட்டுநர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9-வது கிராஸைச் சேர்ந்தவர் சோலைபாண்டியன் (60). காந்தி மார்க்கெட்டில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார், இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகன் சுரேஷ் குமார், கார் மெக்கானிக். இவர்கள் மூவரும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கினர்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் கார் மெக்கானிக் சுரேஷ்குமார் படுத்திருந்த படுக்கை அறை பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் திடுக்கிட்டு எழுந்த போது அந்த அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தது கண்டு பீதி அடைந்தார்.
பின்னர் பார்த்தபோது ஜன்னல் திரை எரிந்து கிடந்தது. உடனே இதுபற்றி சுரேஷ்குமார் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காவல் உதவி ஆணையர் ஜெயசீலன், எஸ்ஐ தங்கராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட மோதலில் சோலை பாண்டியனின் மனைவி மல்லிகாவின் சகோதரர் கோபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு அல்ல வெங்காயவெடி என போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.