விருதுநகர்: பச்சிளம் குழந்தை காலி மனையிடத்தில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஊருக்கு வெளியே உள்ள இந்த சுகாதார நிலையத்தில் ஆமத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றுச்செல்வது வழக்கம். இங்கு கர்ப்பிணிகளுக்கு இலவசமாக பிரசவமும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காலி மனையிடத்தில் கடந்த 15ம் தேதி இரவு குழந்தை அழுகுரல் கேட்டது. அதையடுத்து, அங்குசென்று பொதுமக்கள் பார்த்தபோது பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கிடந்தது தெரியவந்தது. பின்னர், அக்குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக அக்குழந்தை விருதுநகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இக்குழந்தை யாருடயது என்பது குறித்தும், ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்மையில் பிரசவித்த பெண்கள் குறித்த விவரம் குறித்தும் ஆமத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இக்குழந்தை திருமணமாகாத 17 வயது சிறுமி ஒருவருக்கு பிறந்து என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் ஆமத்தூர் அருகே உள்ள அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த விவேக் (24) என்ற இளைஞர், 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்யாமல் கர்ப்பமாக்கியதும், வீட்டில் பிறந்த குழந்தையை அச்சிறுமி ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே காலி மனையிடத்தில் போட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாப்பா கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்த ஆமத்தூர் போலீஸார் விவேக்கை கைது செய்தனர்.