ஜெகன் மோகனுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு: சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு


அமராவதி: முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் ஆந்திராவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும், இதன் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.

முந்தைய ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் அதானி குழுமத்திடம் லஞ்சம் பெற்றதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளிவரவில்லை. இப்போது உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பதால், இதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அரசு யோசித்து வருகிறது. நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து, என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பு பொதுமக்கள் நலனிலேயே உள்ளது. எனவே தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தவறு மீண்டும் நடக்காமல் இருக்க ஒரே வழி.

இன்று வெளிவந்துள்ள இந்த விவகாரம், பொது மன்றத்தில் ஆந்திரா என்ற பிராண்டை மோசமாக சேதப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. வழக்கு ஆவணங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்போம். அதுகுறித்து உங்கள் அனைவருக்கும் தெரிவிப்போம்" என்று அவர் கூறினார்.

இந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தின் (Solar Energy Corporation of India) ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு லஞ்சம் கொடுக்க அதானி உறுதி அளித்தகாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜெகனைச் சந்தித்த அதானி இந்த உறுதியினை அளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டு அதிகாரி ஒருவர் ஆந்திர அரசு அதிகாரிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்கு பின்பே அப்போதைய ஆந்திர அரசு இந்திய சூரிய மின்சார நிறுவனத்திடம் இருந்து 7 ஜிகாவாட் மின்சாரம் வாங்க ஒப்புக்கொண்டது என்றும் இது வேறு எந்த மாநிலமும் வாங்காத அதிக அளவாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

x