தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இரண்டு வாகனங்களையும், மூன்று நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், சோதனை நடத்தியதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் ரகசிய அறை போல் பெட்ரோல் டேங்க் உள் பகுதியில் சுமார் 300 கிலோ கஞ்சாவை பதுக்கி கொண்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, பேராவூரணி அருகே காரங்குடா பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (44) அம்மணி சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த தர்மராஜ் (34) ஆகிய முவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்.