கூடலூர்: நண்பரின் உடலை ஊருக்கு கொண்டு வரும் வழியில் ஆம்புலன்ஸில் இருந்த பாட்டிலில் இருந்தது தண்ணீர் என நினைத்து மதுவை கலந்து குடித்த நண்பர் ஒருவர் உயிரிழந்தார்.
தமிழக கேரள எல்லையான குமுளி அருகே வண்டிப்பெரியாறு சுரக்குளம் அப்பர் டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் (39). திருப்பூரில் பணிபுரிந்து வந்த இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வண்டிப்பெரியாறைச் சேர்ந்த இவரது நண்பர்கள் ஜோபின் (35), பிரபு (40) உட்பட 5 பேர் பிரதாப்பின் உடலை அங்கிருந்து ஆம்புலன்சில் ஏற்றி ஊருக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
இன்று மாலை (நவ.21) தமிழக எல்லையான குமுளிக்கு வந்தபோது, ஆம்புலன்ஸ் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் உள்ளிட்டோர் டீ குடிக்க இறங்கிச் சென்றனர். அப்போது வண்டியில் இருந்த ஜோபின் மற்றும் பிரபு ஆகியோர் ஏற்கனவே பாதி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த மதுவை குடிக்க முயன்றனர். இதில் கலக்க தண்ணீர் இல்லாததால் வண்டியில் நீர் இருக்கிறதா என்று தேடி பார்த்தனர். அப்போது ஆம்புலன்ஸ் பாட்டிலில் இருந்த திரவத்தை குடிநீர் என்று நினைத்து மதுவில் கலந்து குடித்தனர்.
சிறிது நேரத்தில் இருவருக்கும் உடல்நிலை பாதித்து மயங்கினர். உடனே குமுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனின்றி ஜோபின் இறந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு பிரபு கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நண்பனின் உடலை எடுத்துக் கொண்டு வந்த நண்பரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வண்டிப்பெரியாறு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸார் கூறுகையில், “பேட்டரிக்கு ஊற்றப்படும் டிஸ்ட்டில்டு நீரை குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படும். இருப்பினும் எதனால் இறப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து உடற்கூராய்வுக்குப் பின்பே தெரிய வரும்” என்றனர்.