திருச்சி: கஞ்சா, மது போதையில் குடும்பத்தாருக்கு அடிக்கடித் தொல்லை தந்து, தகராறு செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், மனைவி உள்பட 5 பேரை கோட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் குணா (என்ற) குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநரான இவர் மது, கஞ்சாவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினமும் மது, கஞ்சா போதையில் வந்து தனது மனைவி மற்றும் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் இன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன் தனது மனைவி சுலோச்சனா (31), தாய் காமாட்சி (49) ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார்.
அப்பொழுது காமாட்சியின் உறவினர்களான திருநங்கைகள் விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (19), குபேந்திரன் என்கிற நிபுயா (19), மற்றும் குடும்ப நண்பர் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர். காமாட்சியும், சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து காவல் காத்துக் கொண்டனர். மற்ற மூவரும் உள்ளே சென்று குணசேகரனின் உடலில் காலியாக இருந்த ஊசியை மருத்து ஏதுமின்றி காற்றினை (சிரஞ்சி) ஏற்றியுள்ளனர். மேலும், விஜயகுமாரும், லித்தினியா ஸ்ரீயும் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்துள்ளனர்.
பின்னர் குணசேகரனை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர். குணசேகரன் தற்கொலை செய்து கொண்டதாக கோட்டை போலீஸில் காமாட்சி புகார் தெரிவித்துள்ளனர். கோட்டை போலீஸார் குணாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் குணா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோட்டை போலீஸார் காமாட்சி, சுலோச்சனா, விஜயகுமார், திருநங்கைகளைான லித்தின்யா ஸ்ரீ, நிபுயா ஆகிய ஐந்து பேர் மீதும் கொலை, சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து செய்து, திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.