ஓசூர்: நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கண்ணன் (30). இவர் ஓசூரில் உள்ள மூத்த வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் இவர் நீதிமன்ற நுழைவாயில் அருகே நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்தவர் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கண்ணனை அரிவாளால் வெட்டியவர் ஓசூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண்.2) சரணடைந்தார். இதையடுத்து, அவரை ஓசூர் நகர போலீஸார் கைதுசெய்தனர்.
தவறான நட்பு காரணமா?- விசாரணையில், கண்ணனை அரிவாளால் வெட்டியவர் ஓசூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் (38) என்பதும், இவர் வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாகப் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. வழக்கறிஞரான இவரது மனைவிக்கும், கண்ணனுக்கும் தவறான நட்பு இருந்துள்ளது. இதை ஆனந்தகுமார் கண்டித்த நிலையில், இருவரும் நட்பைத் தொடர்ந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கண்ணனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைரலான வீடியோ... இதற்கிடையில், வழக்கறிஞர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தினர். நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைராலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.