சென்னை: நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, நடிகை கஸ்தூரிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. அந்த வகையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி 4 சட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீஸார் முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர் தலைமறைவானார்.
இதனையடுத்து ஹைதராபாத்தில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நடிகை கஸ்தூரி கடந்த நவ. 16ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு, சாலை வழியாக நவ. 17ஆம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி நேற்று முன்தினம் (நவ. 18) அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகை கஸ்தூரி தரப்பில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார். மேலும், நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இதனால் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.