ஹைதராபாத்: லகாசர்லா தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) இளைஞர் பிரிவு தலைவர் பி சுரேஷ் இன்று போலீசில் சரண் அடைந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். நவம்பர் 11-ம் தேதி விகாராபாத் மாவட்டம், லகாச்சர்லா கிராமத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சுரேஷ்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தாக்குதலை தொடர்ந்து எட்டு நாட்களாக தலைமறைவாக இருந்த சுரேஷ், இன்று அதிகாலை காவல்நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார். கோடங்கல் அரசு மருத்துவமனையில் கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவர் சங்கரெட்டி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சுரேஷுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மருந்து நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தெலங்கானா தொழில்துறை உள்கட்டமைப்பு கழகம் (டிஜிஐஐசி) நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது போராட்டக்காரர்கள் ஆட்சியரை தள்ளிவிட்டதாகவும், அவரது வாகனத்தின் மீது கற்களை வீசி எறிந்ததாகவும், கூடுதல் கலெக்டர், கோடங்கல் வட்டார வளர்ச்சி ஆணையத்தின் உயர் அதிகாரி, டிஎஸ்பி தரவரிசையில் உள்ள போலீஸ் அதிகாரி உட்பட பல அதிகாரிகளை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டுத் தூண்டியதாக சுரேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் (எல்ஓசி) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட முன்னாள் பிஆர்எஸ் எம்எல்ஏ பட்னம் நரேந்தர் ரெட்டி உள்ளிட்ட 26 பேரிடமும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரேந்தர் ரெட்டி சுரேஷுடன் சதி செய்ததாகவும், தாக்குதலை நிறைவேற்றுவதை மேற்பார்வையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.